சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே மங்கிஸ் கார்டனில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. நள்ளிரவு 12.15 மணியளவில் இங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
ஒரு குடிசையில் பரவிய தீ மளமள என பக்கத்து குடிசைகளுக்கம் பரவியது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதற்குள் தீ வேகமாக ஒவ்வொரு குடிசைக்கும் பரவ தொடங்கியது. உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பிறகு தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, எழும்பூர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரம் போராடி, இரவு 3 மணிக்கு தீ அணைக்கப்பட்டது. ஆனாலும் 40 வீடுகள் எரிந்து விட்டது. இந்த தீ விபத்தில் கட்டில், பீரோ, துணிமணிகள் உள்பட பல பொருட்கள் எரிந்து சாம்பலானது.
சதி செயல் காரணமாக தீ விபத்து நடந்ததாக தெரிகிறது. குடிசைகளை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு யாரோ குடிசைகளுக்கு தீவைத்து விட்டதாக அங்குள்ள பெண்கள் புகார் கூறினார்கள்.
ஏற்கனவே இதுபோல் ஒரு முறை தீ விபத்து நடந் துள்ளதாகவும் இப்போது 2-வது முறையாக தீப்பிடித்ததாக அங்குள்ளவர்கள் கூறினார்கள். தீ விபத்தில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானதாக தீயணைப்பு துறையினர் மதிப்பீடு செய்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தீ விபத்து நடந்த பகுதிகளை அமைச்சர் வளர்மதி, கவுன்சிலர் சின்னையன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கினார்கள்.
No comments:
Post a Comment