HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Wednesday 18 July 2012

14வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று,,,,எம்பி, எம்எல்ஏக்கள் ஓட்டு போடுகின்றனர்

                          நாட்டின் 14வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பதற்காக நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப் பேரவைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
                     தேர்தலில் வாக்களிக்க எம்.பி., எம்எல்ஏக்களுக்கு அடையாள அட்டை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

                ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் 24ம் தேதியுடன் முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 19ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 12ம் தேதி அறிவித்தது. 

              ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் பிரணாப் முகர்ஜியும், பா.ஜ., அதிமுக, பிஜூ ஜனதா தளம், அகாலிதளம் ஆதரவுடன் பி.ஏ.சங்மாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.  மொத்தம் 42 பேர் மனு தாக்கல் செய்தனர்.
             இதில் பிரணாப், சங்மா மனுக்கள் தவிர மற்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. நியமன எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க முடியாது. 

               1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநில எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.  இதன்படி, ஒரு தமிழக எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 176. நாடு முழுவதும் மொத்தமுள்ள 4,120 எம்.எல்.ஏ.க்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,49,474. 
           இதன் அடிப்படையில் எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி, ஒரு எம்.பி.யின் வாக்குமதிப்பு 708. நாடாளுமன்ற இரு அவைகளிலும் உள்ள எம்.பி.க்கள் 776 பேரின் மொத்த வாக்கு மதிப்பு 5,49,408. 

             ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க உள்ள எம்.பி, எம்எல்ஏக்களின் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,98,882. இதில் பாதிக்கு மேல் அதாவது, 5,49,442 வாக்குகளை பெறுபவரே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரணாப், 
              சென்னையில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். கடந்த 30ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

            பா.ஜ, அதிமுக ஆதரவுடன் போட்டியிடும் சங்மாவும் பல மாநிலங்களுக்கும் சென்று ஆதரவு கோரினார். இடதுசாரி கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், ஆர்.எஸ்.பி. மற்றும் தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. 
                 ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பிரணாப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று டெல்லியில் மதிய விருந்தளித்தார். இதில், மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த கே.டி.சிங், சுகேந்து சேகர் ராய் ஆகிய எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். 

          ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வாக்குகள் மட்டுமே பிரணாப் வெற்றி பெற போதும் என்றாலும், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட், பார்வர்டு பிளாக், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பா.ஜ. கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா ஆகிய கட்சிகளின் ஆதரவும் இருப்பதால் பிரணாபின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.  கடைசி நேரத்தில் ஆதரவு தெரிவித்த திரிணாமுல் காங்கிரசால் பிரணாபின் வெற்றி சதவீதம் அதிகரிக்கும். 

            அடையாள அட்டை கட்டாயம்:  எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க உள்ளனர். இதற்காக, நாடாளுமன்ற 63ம் எண் அறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
               வாக்களிக்க வரும் எம்.பி.க்கள் அடையாள அட்டை அல்லது தேர்தல் அதிகாரியின் அனுமதி கடிதத்தை காட்ட வேண்டும் என்று தேர்தல் அதிகாரியும் மாநிலங்களவை செயலாளருமான வி.கே. அக்னிஹோத்ரி தெரிவித்தார்.

22ம் தேதி ரிசல்ட்

* எம்.பி, எம்எல்ஏக்களின் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,98,882. 
* பாதிக்கு மேல் அதாவது, 5,49,442 வாக்குகளை பெறுபவரே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.
* பிரணாப்புக்கு 7.5 லட்சம் வாக்குகள் கிடைப்பது உறுதி. அதாவது 4ல் 3பங்கு ஆதரவு இது.
* இன்று பதிவாகும் வாக்குகள் 22ம் தேதி எண்ணப்படுகின்றன. அன்று மாலை முடிவு அறிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment