முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வுப் பணிக்காக, "டிரில்லிங் மெஷின்' மூலம் துளையிடப்பட்ட துளைகளை, அடைக்கச் சென்ற தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகளை, கேரள நீர்ப் பாசனத் துறையினர் திருப்பி அனுப்பினர்.
முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க, ஐவர் குழுவிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பரில், அணைப் பகுதியில் ஆய்வு துவங்கியது.
துளைகள்: அணைப் பகுதியில், "டிரில்லிங் மெஷின்' மூலம் துளையிட்டு எடுத்த சாம்பிளை, பலம் குறித்த சோதனைக்காக அனுப்பினர். மெயின் அணையில், ஐந்து இடத்திலும், பேபி அணையில் ஒரு இடத்திலும், துளைகளை அடைக்கவில்லை.
டெண்டர்: துளைகளை அடைக்க, 86 லட்சம் ரூபாய் டெண்டர் விட்டு, தமிழக பொதுப்பணித்துறையினர் தயாராகினர். அணையில் பாதுகாப்பு பணியில் இருந்த கேரள போலீசார், துளைகளை அடைக்க விடாமல் தடுத்தனர். இந்நிலையில், அணையில் உள்ள துளைகளை அடைக்க, போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என கேரள அரசுக்கு, தமிழக பொதுப்பணித் துறையினர், கடிதம் அனுப்பினர். இதுவரை பதில் வரவில்லை.
திரும்பிய அதிகாரிகள்: தமிழக பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் கல்யாண சுந்தரம், உதவி பொறியாளர் ராஜகோபால், தொழில்நுட்ப உதவியாளர் பாலமுருகன் தலைமையிலான குழு, இன்று, மெயின் அணையில் உள்ள துளைகளை, அடைக்க சென்றனர். அங்கிருந்த, கேரள நீர்ப் பாசன உதவி செயற்பொறியாளர், டேவிட் மற்றும் கேரள போலீசார், இவர்களை தடுத்தனர். இரு தரப்பிலும், வாக்குவாதம் ஏற்பட்டது. உயர்மட்டக் குழு, கேரள அரசிடமிருந்து அனுமதி கடிதம் வந்தால் மட்டுமே, அணையில் உள்ள துளைகளை அடைக்க, அனுமதிக்க முடியும் என, கேரள அதிகாரிகள் கூறினர். இதையடுத்து, தமிழக அதிகாரிகள், துளைகளை அடைக்காமல், ஏமாற்றத்துடன் திரும்பினர்.
labels:டேவிட்,கல்யாண சுந்தரம், டிரில்லிங் மெஷின்,முல்லைப் பெரியாறு
No comments:
Post a Comment