பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இலங்கைக்கு எதிரான 2 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த பாகிஸ்தான் அணி அடுத்ததாக 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.
இதன்படி பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பல்லகெலேவில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இரு அணிகளும் சம பலத்துடன் விளங்குகின்றன.
மஹேலா ஜெயவர்த்தனே தலைமையிலான இலங்கை அணியில் பேட்டிங்கில் தில்ஷன், சங்கக்கரா, திரிமன்னே, மேத்யூஸ், திசரா பெரேரா, சன்டிமால் ஆகியோரும், பந்து வீச்சில் குலசேகரா, மலிங்கா, ஹெராத் ஆகியோரும் வலு சேர்க்கிறார்கள்.
மிஸ்பா உல்-ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் பந்து வீச்சின் கை சற்று ஓங்கி உள்ளது. சுழற்பந்து வீச்சில் அப்துர் ரகுமான், சயீத் அஜ்மல், ஆல்-ரவுண்டர் அப்ரிடி, வேகப்பந்து வீச்சில் உமர்குல் ஆகியோர் சமீப காலமாக மிரட்டி வருகிறார்கள்.
இதே போல் அப்ரிடி, அசார் அலி, உமர்அக்மல், யூனிஸ்கான், கேப்டன் மிஸ்பா உள்ளிட்டோர் பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 127 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்து உள்ளன. இதில் 76-ல் பாகிஸ்தானும், 47-ல் இலங்கையும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. 3 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
labels:அப்ரிடி, அசார் அலி, உமர்அக்மல், யூனிஸ்கான், கேப்டன், பாகிஸ்தான்,
No comments:
Post a Comment