புற்றுநோயில் சிக்கி மரணத்தை எதிர்நோக்கும் நான்கு நண்பர்கள் கதை........
தொழில் அதிபர் ஜெயராம், இசைக்கலைஞன் போபன், கூலிக்கு அடிதடியில் இறங்கும் ஜெய்சூர்யா மூவரையும் புற்றுநோய் தாக்குகிறது. சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்றனர். அதே ஆஸ்பத்திரியில் மருத்துவக்கல்லூரி மாணவி மீரா ஜாஸ்மினும் சிகிச்சை பெறுகிறார்.
ஆரம்பத்தில் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு பிறகு நட்பாகின்றனர்.சாவதற்கு முன் ஜெய்சூர்யாவுக்கு தன் மானசீக ஹீரோ கமலை காணவேண்டும், போபனுக்கு மலேசியாவில் படிக்கும் காதலியை சந்திக்கவேண்டும் என்கிற கடைசி ஆசைகளை பூர்த்தி செய்ய ஜெயராம் முன் வருகிறார். அதோடு உலகை சுற்றி பார்க்கவும் விரும்புகின்றனர்.
இதற்காக வெளிநாடு புறப்படுகிறார்கள். ஆசைகள் நிறைவேறியதா? என்பது மீதி கதை...
மலையாளத்தில் “போர் பிரண்ட்ஸ்” பெயரில் வந்த படம் தமிழில் “அன்புள்ள கமல்” ஆகியுள்ளது.அழுத்தமான திரைக்கதை, வலுவான கேரக்டர்களில் காட்சிகளை விறு விறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் சாஜி சுரேந்திரன்.
தாய், தங்கைக்காக உழைக்கும் ஜெயசூர்யா, காதலியுடன் இனிமையாக நாட்களை நகர்த்தும் போபன், விமான பயணம், பணியாட்கள் என பெரும் கோடீஸ்வரராய் வலம் வரும் ஜெயராம் மூவரும் புற்றுநோய் தாக்கி ஒரே இடத்தில் சந்திக்கும் நிகழ்வுகள் ஈர்க்கின்றன.
ஆதரவற்றவள் என்ற மன அழுத்தத்தில் சக நோயாளிகளிடம் சண்டையிடும் மீரா ஜாஸ்மினும் அவரிடம் பிரியம் காட்டும் குழந்தையும் கவர்கிறார்கள்.
தன் ஹீரோ கமலை சந்தித்ததும் மகிழ்ச்சியின் எல்லைக்கு போகும் ஜெய்சூர்யா உணர்ச்சிகளை யதார்த்தமாக கொட்டுகிறார். காதலியின் சுடு வார்த்தைகளில் இதயம் வெடித்து விழும் போபன் பரிதாபம்.
நோயாளிகள் ஆசைகளை நிறைவேற்றும் பணக்கார நோயாளியாக ஜெயராம் மனதில் பதிகிறார். கமலின் திடீர் பிரவேசமும் புற்றுநோயை எதிர்த்து போராடும் தன் குடும்பத்து பெண்கள் பற்றி அவர் பேசும் தன்னம்பிக்கை வசனங்களும் நேர்த்தியானவை. கிளைமாக்ஸ் ஜீவன்.
நோயாளிகளின் மன வலியை இன்னும் ஆழமாக பதிவு செய்து இருக்கலாம். எம். ஜெயச்சந்திரன் இசையில் பாடல்கள் இனிமை, அணில் அய்யர் கேமரா கேரளா, மலேசிய அழகை அள்ளி தெளிக்கிறது.
No comments:
Post a Comment